’13’ அடிப்படையிலான அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கும் : எரிக் சொல்ஹெய்ம் நம்பிக்கை.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தாம் நம்புவதாக நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு சிங்கள முஸ்லிம் மக்களின் ஆதரவு அவசியம் என சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படை அடித்தளமாக அமைய வேண்டும் எனவும், அதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் அந்தந்த மாகாண மக்கள் தமது அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் எஸ். ஸ்ரீதரனைச் சந்தித்தபோது எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.