விராட் கோலிக்கு சிறந்த பரிசை வழங்கவேண்டும் – ஜஸ்ப்ரித் பும்ரா.

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மொஹாலியில் துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் 2வது போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட உள்ளது.

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கையை பந்தாடிய இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது போலவே இந்த தொடரையும் இந்தியா வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது.

முன்னதாக நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு எடுத்து வந்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்கள். இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெறும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மைதானத்தில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி வைத்த அவர் அதன்பின் தனது அபார திறமையால் படிப்படியாக வளர்ந்து இன்று இந்திய பேட்டிங் துறையில் முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய ஜஸ்ப்ரித் பும்ரா, “இது விராட் கோலியின் நூறாவது டெஸ்ட் போட்டி. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் அதைவிட சிறந்த பரிசை விராட் கோலிக்கு வழங்கமுடியாது.

அவர் இப்போட்டியில் தனது சிறப்பை வெளிப்படுத்த விரும்புகிறார். நாங்கள் எந்தப் போட்டியை விளையாடினாலும், அது அவருடைய 100aஆவது டெஸ்டாக இருந்தாலும் சரி, நிச்சயமாக, ஒரு பெரிய சாதனைதான், ஆனால் இந்தியாவின் முக்கிய கவனம் தொடரில்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.