சிங்களவர்களையும் அரவணைத்துக்கொண்டு இலக்கை நோக்கி நகருவோம்!

முற்போக்கான சிங்கள சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாத்தளை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தும், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இந்நிலைமை மாறவேண்டும். முற்போக்கான சிங்கள சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும்.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எமது கட்சி அன்று கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அதனால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி கூடத் தோற்றம் பெற்றது. எனவே, இப்பகுதிகளில் நாம் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும்கூட, மலையக மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளோம். ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட சர்வதேச மயப்படுத்தினோம்.

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று இந்த ஆயிரம் ரூபா சம்பள விவகாரம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா போதாது. 2000 ரூபா வழங்கப்பட்டாலும் சமாளிக்க முடியாத வகையிலேயே நாட்டில் விலைவாசி உள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.