வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து அணி , வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் மோதிய டி20 போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டா சிறப்பாக விளையாடி சதமடித்தார். 140 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 157.3 ஓவர்களில் 375 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக போனர் 123 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் அலெக்ஸ் லீஸ் மற்றும் சக் ஹுரூலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்.

அலெக்ஸ் 6 ரன்னில் வெளியேறினார். ஆனால், சக் ஹுரூலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக் ஹூரூலி சதம் விளாசினார். ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சக் ஹூரூலி 117 ரன்களுடனும், ஜோ ரூட் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் விளாசினார். சக் ஹூரூலி 121 ரன்னிலும், ரூட் 109 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கபட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராத்வெயிட் மற்றும் ஜான் சாப்பெல் களமிறங்கினர். பிராத்வெயிட் 33 ரன்னிலும், சாப்பெல் 22 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த பிரோக்ஸ் 5 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் 5-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பொனர் 38 ரன்னிலும், ஹொல்டர் 37 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பார்படாசில் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.