முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(15) காலை 9.30மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்ல விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது மாவட்ட மருத்துவமனையின்; சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் கே.வாசுதேவ குறித்த சம்பவத்தின் பின்புலங்கள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். துறை சார் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதைத் தொடர்ந்து இவ் வாரத்திற்குள் அனைவரையும் ஒன்றித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் பாடசாலைகளில் பாலியல் கல்வியின் அவசியத்தையும் சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் கே.வாசுதேவ சுட்டிக்காட்டியிருந்தார். இதனால் இரு உயிர்கள் மாவட்டத்தில் இழக்கப்பட்டமை தொடர்பிலும் எடுத்துக்கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறி பாடசாலைகளை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்காக தரம் 09 வரையான தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை காலை நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் துறை சார்ந்த அனைவரும் கண்காணிப்புக்களை மேற்கொள்வது தொடாபில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இதனை விட சுகாதாரம், போசனை, கல்வி, போதைப்பொருள், சமூக எதிர்ப்பு நடவடிக்கைகள், சிறுவர் உள பிரச்சினைகள், தற்கொலைகள், சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச சார்பற்ற நிறவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.