ஐபிஎல் திருவிழா ஆரம்பம் சிஎஸ்கே-கேகேஆர் இன்று மோதல்.

15வது ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் களம் காண்கிறது. டோனி பதவி விலகியதால் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்சை வழி நடத்துகிறார்.

விசா கிடைப்பதில் தாமதத்தால் மொயின் அலி இன்னும் அணியில் இணைய வில்ைல. அவர் இந்தியா வந்தடைந்த போதிலும் 3 நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அவர் இல்லை. அடுத்த போட்டியில் (31ம் தேதி லக்னோவுடன்) இருந்து இடம் பெறுவார். டோனி ஒரு வீரராக ஆடஉள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, பிராவோ, அம்பதிராயுடு, உத்தப்பா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. தீபக் சாகர் காயத்தில் இருந்து மீளாததால் சில போட்டிகளில் ஆட முடியாது. இதனால் கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, பிரசாந்த் சோலங்கி ஆகியோரையே அணி நம்பி உள்ளது.

மறுபுறம் கேகேஆர் அணி புதிய கேப்டன் ஸ்ரேயாஸ்அய்யருடன் களம் இறங்குகிறது. ஆரோன்பிஞ்ச், கம்மின்ஸ் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிந்தபின்னர் தான் அணியில் இணைவார்கள். இருப்பினும் வெங்கடேஷ் அய்யர், நிதிஷ்ரானா, ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல், சாம் பில்லிங்ஸ் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் டிம் சவுத்தி, ஷிவம்மாவி, சுழலில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆதிக்கம் செலுத்துவார்கள். வெற்றியுடன் தொடங்க இரு புது கேப்டன்களும் போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சிஎஸ்கேஆடும் லெவன்: ருதுராஜ் , உத்தப்பா, கான்வே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), சிவம் துபே, டோனி(வி.கீ), டுவைன் பிராவோ, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், கிறிஸ் ஜோர்டன்/ மகேஷ் தீக்ஷனா,ஆடம் மில்னே.
கேகேஆர்: வெங்கடேஷ்அய்யர், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (வி.கீ.), ரஸ்சல், சுனில் நரைன், சமிகா கருணாரத்னே, ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ்/ராசிக் சலாம் தர்.

ஐபிஎல் மற்றும் சாம்பியன் லீக் சேர்த்து இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 18ல் சென்னை சூப்பர் கிங்ஸ்சும், 9 போட்டியில் கொல்கத்தாவும் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கேகேஆருக்கு எதிராக சென்னையின் அதிகபட்ச ஸ்கோர் 220, கேகேஆரின் அதிகபட்ச ரன் 202. கடந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 3 போட்டியிலும் (பைனல் உள்பட) சிஎஸ்கே தான்வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்ததில் சென்னை 7 போட்டியிலும், கொல்கத்தா ஒருமுறையும் வென்றுள்ளது. சேசிங்கில் சென்னை 11, கேகேஆர் 7ல் வென்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.