தேர்வு அறையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் – வீடியோ வெளியானதால் நடவடிக்கை

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வறைக்குள் அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு போட்டியாக, இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக் கூடாது என்று அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த சூழலில் மார்ச் 28-ம்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்றும், இதில் பங்கேற்பவர்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு முஸ்லீம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில், சில பள்ளிகளில் ஹிஜாப்புடன் மாணவிகள் தேர்வெழுதியதாக தகவல் வெளியான‌து. இதுகுறித்து விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தர விட்டது. இதன்பேரின் நடத்தப்பட்ட‌ விசாரணையில் கதக் மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளில் மாணவி கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது கண் டறியப்பட்டது.

இதற்கு காரணமான 2 தேர்வு பார்வையாளர்கள் மற்றும் 7 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட துணை முதன்மை கல்வி அதிகாரி பசவலிங்கப்பா தெரிவித்துள்ளார். முன்னதாக பெங்களூருவில் தேர்வறையில் ஹிஜாப் அணிந்திருந்ததாக நூர் பாத்திமா என்ற ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வறைக்குள் அனுமதித்த விவகாரத்தில் 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கதக் மாவட்டத்தில் இரு பள்ளிகளைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் மாற்றம் இரண்டு தேர்வு கண்காணிப்பாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.