ஊடகவியலாளர்களையும் , ஊடக நிறுவனங்களையும் முடக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது : JVP

மிரிஹான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர்களையும் , ஊடக நிறுவனங்களையும் முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

அதன்படி இது தொடர்பில் ஜே.வி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மிரிஹான பிரதேசத்தில் 31 ஆம் திகதி இரவு அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் , அதனை அடிப்படையாகக் கொண்டு மக்கள் போராட்டங்களை மிரட்டி ஒதுக்குவதற்கும் , மறுபுறம் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு ஊடகவியலாளர்களையும் , ஊடக நிறுவனங்களையும் மௌனிக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றமை தெளிவாகிறது.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புபடையினரை அனுப்பி அரசாங்கம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய , இரு ஊடகவியலாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன் மூலம் மக்கள் எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக , மக்களின் போராட்டங்களை செய்தி மூலம் தெரியப்படுத்துவதற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக விரோத , அடக்குமுறை செயற்பாடுகளை கடுமையாக கண்டிக்கின்றோம்.

இதன்படி ,ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றமை மற்றும் கைது செய்வது மாத்திரமின்றி , தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஊடக நிறுவனங்களை மௌனமாக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும் அரசாங்கம் இந்தச் சம்பவங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

ஜனநாயகம் மற்றும் மக்களின் தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

மக்கள் போராட்டங்களுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் விசாரிப்பதற்குப் பதிலாக, அதற்குக் கீழ்ப்படியாத ஊடக நிறுவனங்களின் குரலை முடக்கவும் , ஊடகவியலாளர்களைத் தாக்கவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் அவர்களைக் கைது செய்து ஒடுக்கும் அரசின் முயற்சி உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரையும் அணி திரளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் ,கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.