இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள் – வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நிலவும் தீவிர பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தலைநகர் கொழும்புவிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றி தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் உரிய அனுமதியும் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.