மக்கள் ஆங்கிலம் தெரிந்துகொண்டால் ஆட்சி நடத்த முடியாது என்பதால் இந்தியை திணிக்கின்றனர்: கனிமொழி

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் எப்படி பொருளாதார வளர்ச்சியிலும் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று டெல்லியில் பலர் எங்களிடம் கேட்கிறார்கள்.. ‘இது தான் திராவிட மாடல்’ என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிது. அந்தவகையில், நேற்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம்ஸ் மூர்த்தி, திமுக கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய கனிமொழி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது கோவிட் பாதிப்பால் மருத்துவமனைகள் நிறைந்திருந்தன. மருத்துவமனையில் ஒரு படுக்கை கிடைக்க பலருக்கு அழைத்து பேச வேண்டியிருந்தது.

கடந்த ஆட்சியில் எந்த தொழிலையும் புதிதாக தொடங்க முடியாமல் இருந்த தொழிற்சாலைகளையும் மூடிவிட்டு செல்லும் நிலை இருந்தது.

யாருக்கோ ஓட்டுப் போட்டு இவர்கள் ஆட்சி செய்தார்கள். ஆட்சி செய்ய தகுதி இல்லாதவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். இந்தியாவிலேயே விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்த மாநிலம் தமிழ்நாடு. விவசாயிகளை காப்போம் என பேசுவார்கள் ஆனால் விவசாயிகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தனர்.

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையில் ஏழை, சாமானிய குழந்தைகள் படிக்க வழி இல்லை. ஆனால் தமிழகத்தில் பெண்கள் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பை 1000 ரூபாய் நிதி உதவி மூலம் கொடுத்திருப்பது நம் முதல்வரின் பட்ஜெட். பெண்கள் உயர்கல்வி படிக்க ஊக்கவிக்கும் விதமாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டின் சிறப்பு.

உத்திரப் பிரதேசத்தில் 18,000 பேருக்கு 1 மருத்துவர், தமிழகத்தில் 250 பேருக்கு 1 மருத்துவர் என திராவிட இயக்கம் உருவாக்கி வைத்திருப்பது தான் நம் முதல்வர் சொல்லும் திராவிட மாடல்.

நாம் நம் பிள்ளைகளுக்கு கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க முடியாதபடி நீட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக பாஜகவினர் கூறினர். ஆனால் மத்திய சுகாதாரத்துறை அதிகாரி நீதிமன்றத்தில் உள் ஒதுக்கீடு அரசியல் அமைப்புக்கு எதிரானது என வாதிட்டார். இது மத்திய அமைச்சர்களுக்கு தெரியாதா?

உள்துறை அமைச்சர் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என சொல்கிறார். ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக வேண்டும் எனக்கூறுகிறார். நமக்கும் ஒன்றிய அரசுக்கும் பல பிரச்சனைகள் உண்டு. இப்போது மீண்டும் மொழிப்பிரச்சினைக்கு வித்திடுகிறார்கள்.

மத்திய அரசுக்கு தெரிந்த இந்திய மொழிகள் இரண்டே இரண்டு தான் ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டும் தான். கோவிலுக்குள்ளும் விட மாட்டீர்கள். அந்த வேலைக்கும் செல்ல முடியாது. பிறகு எதற்கு நாங்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்?

மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற பழைய நிலையை கொண்டு வரப்பார்க்கிறார்கள். ஆங்கிலம் படித்தால் மக்கள் அனைவரும் உலக அறிவை பெற முடியும் ஆனால் மக்கள் எதையும் தெரிந்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும், மக்கள் தெரிந்துகொண்டால் அவர்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதால் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிக்கின்றனர்.

பாஜக ஆட்சி தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. நமக்கு வர வேண்டிய திட்டங்கள், நிதி எதுவுமே கிடைப்பதில்லை. மத்திய அரசு எந்த நிதியையும் விடுவிக்காவிட்டாலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது

உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் எப்படி பொருளாதார வளர்ச்சியிலும் எப்படி சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று டெல்லியில் பலர் எங்களிடம் கேட்கிறார்கள். இது தான் திராவிட மாடல். பொருளாதார வளர்ச்சி என்பது அதானி, அம்பானியை மட்டும் வளர்ப்பது இல்லை என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.