இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு வழங்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனிடம் தில்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தினகரனின் உறவினர் வி.கே. சசிகலா தலைமையிலான அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரியதால், அதிமுகவின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வி.கே.சசிகலா அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் பணம் வாங்கியதாக இடைத்தரகர் சுகேஷ் (எ) சந்திரசேகர் கடந்த 2017, ஏப்ரலில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தில்லி போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் டிடிவி தினகரனையும் தில்லி போலீஸôர் கைது செய்தனர். தினகரனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே ரூ.50 கோடி பேரம் நடைபெற உதவியதாகக் கூறி, தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகிய இருவரும் 2017, ஆகஸ்ட் மாதத்தில் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் இருந்து பின்னர் டிடிவி தினகரன் விலகிய நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். அவர் இதன் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஏற்கெனவே வேறு பல வழக்குகளில் திகார் சிறையில் இருந்து வரும் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத் துறையினர் இந்த மாதம் 4-ஆம் தேதி கைது செய்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இது தொடர்புடைய விசாரணையை மேற்கொண்டு தொடரும் வகையில் டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த அவரை தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த வாரம் அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு மேல் டிடிவி தினகரன் வந்தார். இதன் பின்னர், அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.