பதினைந்து அமைச்சர்கள் இருபது ஆகிறார்கள்; பழைய 10பேருக்கு அமைச்சு பதவி

புதிய அமைச்சரவை இன்று (18) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் சுமார் 22 பேர் அங்கம் வகிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. முன்னர் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 15ஐ தாண்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவையில் சுமார் பத்து முன்னாள் கேபினட் அமைச்சர்கள் அடங்குவார்கள், இவர்கள் அனைவரும் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.

தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, அலி சபேர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர்களான டொக்டர் ரமேஷ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா, திலும் அமுனுகம ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, காஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க, டி.வி.சானக்க, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், ஜானக வக்கும்புர மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் நேற்றிரவு (16) ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலாநிதி பந்துல குணவர்தன, காமினி லொகுகே, பிரசன்ன ரணதுங்க, எஸ். எம். சந்திரசேன, ஜனக பண்டார தென்னகோன், சி. பி. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இந்த அமைச்சுப் பதவி தேவையற்றது என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, புதிய அமைச்சரவை பதவிகளை ஏற்கப்போவதில்லை என டலஸ் அழகப்பெரும மற்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் இன்று (17) டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தனர்.

அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு பேராசிரியர் சரித ஹேரத், பிரமித பண்டார தென்னகோன், டிலான் பெரேரா, எஸ்.ஏ.டி.ஜகத் குமார உள்ளிட்ட பல இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மார்ச் 3 இரவு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் முகத்தில் அமைச்சரவை இராஜினாமா செய்தது, அடுத்த நாள் ஜனாதிபதி மூன்று அமைச்சர்களை மட்டுமே பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் வழமையான பணிகளைத் தொடர நியமித்தார்.

Leave A Reply

Your email address will not be published.