புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் அதிரடி மாற்றம்… பின்னணி என்ன?

புதுச்சேரி தலைமை செயலாளராக இருந்த அஸ்வினி குமார் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுப்பதாகவும் ஆளுங்கட்சியினரே கூறிவந்த நிலையில், அவர் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளராக அஸ்வினி குமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு புதுச்சேரியில் பணிக்கு அமர்த்தப்பட்டார். அப்போது துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இருந்த நிலையில் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தார். இதனால் தலைமைச் செயலாளரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் காங்கிரஸ் அரசுக்கு தடையாக இருப்பதாக பல கட்ட போராட்டங்கள் அப்போதைய முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் அமைந்துள்ளது. துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு தமிழிசை சௌந்தரராஜன் கூடுதல் துணைநிலை ஆளுநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும் தலைமை செயலாளர் அஸ்வினி குமார் மாற்றப்படவில்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தலைமை செயலாளர் தடையாக இருப்பதாகவும், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பதாகும் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். முதல்வரின் அறையில் நடைபெறும் நிகழ்வுகளை தலைமை செயலர் தவிர்த்து வந்தார்.

முதல்வரும் அவரை அழைத்து பேசுவதை தவிர்த்தார். சட்டமன்றத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் இதற்காக ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து வந்தனர் .அதே வேளையில் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

எனினும் தலைமை செயலாளர் மாற்றப்படாமல் இருந்துவந்தது. ஆனால் மாற்றப்படவில்லை. இதனால் தான் அவர் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கவில்லை என ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டது. வருகிற 24-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் புதுச்சேரியில் தலைமை செயலர் அஸ்வினி குமார் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் பணிபுரிந்த I.A.S அதிகாரி ராஜீவ் வர்மா புதுச்சேரியின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டு அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தனது முதல் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதால் அமித் ஷா வருகைக்கு முன் முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்வார் என கூறப்படுகிறது. அமித் ஷா வருகையால் புதுச்சேரிக்கு பல திட்டங்கள் வரும் என பாஜக தரப்பில் கூறப்பட்டாலும் புதுச்சேரியில் முழுமையான பாஜக ஆட்சி விரைவில் அமைய உள்துறை அமைச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.