கட்சித் தலைவர் கூட்டத்தை உடன் கூட்டுங்கள்! – சபாநாயகரிடம் சஜித் கோரிக்கை.

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சடடத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பொருட்டு கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,

“நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள சவால்மிக்க நிலைமைக்கு அரசமைப்பு நேரடியாகத் தலையிட வேண்டியது அவசியம் என நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். தற்போதைய நிலையில் நாடாளுமன்றத்தில் எடுக்கும் முடிவுகள் குறித்து முழு நாட்டு மக்களும் அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் கோரும் பிரதான மறுசீரமைப்புக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது முக்கியமானது. அத்தோடு, நாட்டினுள் சிறந்த ஆட்சி மற்றும் வெளிப்படையான தீர்மானங்கள் தொடர்பாக அரசமைப்பு மாற்றம் அத்தியாவசியமானதாகும்.

எனவே, அதற்காக தற்போது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்காகக் கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு, இக்கூட்டத்திற்கு சட்டமா அதிபர், அத்திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் சட்ட வரைபு திணைக்களத்தின் அதிகாரிகளையும் அழைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நடவடிக்கைகளை மேலும் காலம் தாழ்த்துவதற்கோ அல்லது பேச்சு நடத்திக்கொண்டிருப்பதற்கான காலம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எங்களுடைய நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மதிப்புக்குரிய மாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தொழில்முனைவோர்களான புதிய தலைமுறை இளைஞர், யுவதிகள் என முழு நாட்டு மக்களும் நாட்டுக்காக உடனடியாக எடுக்க வேண்டிய தீர்வுகள் தொடர்பாக நாடாளுமன்றம் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றனர். எனவே, தற்போது நீங்கள் எடுக்கும் தீர்மானங்களே எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். இந்தக் கோரிக்கைக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.