மரியுபோல் ஆலையைச் சுற்றி போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷியா.

கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடும்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 8 பேர் பலியாகினர்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தபோது, இந்தப் போர் ஒரு வார காலத்தில் அல்லது ஒரு 10 நாளில் முடிந்து விடும் என்றுதான் சர்வதேச அரங்கில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்து செல்கிறது. ஆயிரக்கணக்கானோர் போரில் பலியாகி உள்ளனர். 51 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களில் 29 லட்சம் பேர் போலந்தில் உள்ளனர்.

தலைநகர் கீவை கைப்பற்றும் கனவு நனவாகாத நிலையில், ரஷியாவின் பார்வை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திரும்பி உள்ளது. அங்கு கடும் போர் நடந்து வருகிறது.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியா நடத்திய கடும் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பிராந்திய தலைவர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.

ஹிர்ஸ்கே மற்றும் சோலோட் நகரங்கள் மீது குண்டு வீசி தாக்கியதில் மட்டுமே 6 பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

முடிந்துள்ள வாரத்தில் நாட்டின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியாவின் பல தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளது என்று இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுபற்றி குறிப்பிடுகையில், “ரஷியா பிராந்திய அளவில் சில ஆதாயங்களை அடைந்துள்ளபோதிலும், உக்ரைனிய எதிர்ப்பு அனைத்து வகையிலும் வலுவாக உள்ளது. உக்ரைன் படையினர், ரஷியாவுக்கு குறிப்பிடத்தக்க செலவை ஏற்படுத்தினர். மோசமான மன உறுதியாலும், முந்தைய தாக்குதல்களில் இருந்து படைகளை சீரமைக்க வேண்டியிருப்பதாலும் ரஷியா போர் செயல்திறன் தடுக்கப்படலாம்” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் பிற நகரங்களிலும் சண்டை நீடிக்கிறது. ரஷிய படைகளிடம் ஆரம்பத்தில் விழுந்த கெர்சன் நகரில் ரஷிய கட்டளைச்சாவடியை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடந்தபோது அந்த கட்டளை மையத்தில் 50 ரஷிய படை அதிகாரிகள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தாக்குதலின்போது அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவரவில்லை.

இதற்கிடையே உக்ரைனுக்கு ஜெர்மனி கனரக ஆயுதங்கள் வினியோகிப்பதை அந்த நாட்டின் மக்களில் பாதிப்பேர் விரும்பவில்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மரியுபோல் நகரை பிடித்து விட்டதாக ரஷியா அறிவித்தபோதும், அங்குள்ள அஜோவ் உருக்காலை இன்னும் வீழ வில்லை. அந்த ஆலையை தகர்க்கும் உத்தரவை ரஷிய அதிபர் புதின் ரத்து செய்துவிட்டதாக முதலில் தகவல் வெளியானாலும், அங்கு தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் கூறுகிறது. ரஷிய விமானங்கள் அந்த ஆலை மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி அந்த பிராந்திய ராணுவ துணை தளபதி ஸ்வய டோஸ்லாவம் பாலமர் கூறுகையில், “ஆலை மீது ரஷியா கடற்படை பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துகிறது. டாங்கிகளாலும் சுடுகிறது. ஆலையை தகர்க்க காலாட்படையும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகைக்கு கூட ரஷியர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை” என குறிப்பிட்டார்.

மரியுபோல் நகரில் சிக்கியுள்ள 1 லட்சம் மக்கள் வெளியேற போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என ஐ.நா. சபையும், செஞ்சிலுவை சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. “நாம் எவ்வளவு காலம் காத்திருக்கிறோமோ, அவ்வளவு உயிர்கள் ஆபத்தில் இருக்கும்” என்று ஐ.நா.வின் உக்ரைன் நெருக்கடி ஒருங்கிணைப்பாளர் அமீன் அவாத் கூறினார்.

செஞ்சிலுவை சங்கம் கூறுகையில், “மரியுபோலில் நடந்து வரும் நிகழ்வுகள் ஆழ்ந்த எச்சரிக்கையாக அமைகின்றன. அங்குள்ள பொதுமக்களை சந்திக்கிற நிலை வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் போர் நிறுத்தத்துக்கு ரஷியா உடன்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும் ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையையொட்டி போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகை, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் மிக முக்கியமான பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.