சனத் நிஷாந்த கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜெயதிலக மற்றும் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட 22 பேரைக் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் நேற்றுப் பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அரசும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக”கோட்டா கோ கம’ மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ என்னும் பெயர்களில் தன்னெழுச்சியாக அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்கள் மீது கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜெயதிலக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 22 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்குச் சட்டமா அதிபர் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த 22 சந்தேகநபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாகக் கைதுசெய்து, சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் சந்தேகநபர்கள் அவர்களின் முகவரிகளில் இல்லாவிடின் சாட்சியங்களை முன்வைத்து அவர்களைக் கைதுசெய்வதற்கு நீதிவான் ஒருவரிடமிருந்து திறந்த பிடியாணையைப் பெறவேண்டும் என்றும், உரிய முகவரிகளில் இல்லாத சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்குப் பொதுமக்களின் உதவியை நாடுமாறும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.