இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லக்னோ அணி.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ள லக்னோ அணி.

15வது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 210 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் டி காக் 140 ரன்களும், கே.எல் ராகுல் 68 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர் (0) மற்றும் தமோர் (4) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் களத்திற்கு வந்த நிதிஷ் ராணா பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த ரசல் 11 பந்துகளை எதிர்கொண்டு அதில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டையும் இழந்ததால் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 55 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

போட்டியின் 18 மற்றும் 19வது ஓவரில் சுனில் நரைன் மற்றும் ரின்கு சிங் ஆகியோர் தலா 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை எதிர்கொண்ட இளம் வீரரான ரின்கு சிங் அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த இரண்டு பந்தில் சிக்ஸரும் விளாசினாலும், 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற இலகுவான நிலையை கொல்கத்தா அணி எட்டியபோது விக்கெட்டை இழந்தார். கடைசி ஒரு பந்திற்கு மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவும் விக்கெட்டை இழந்ததால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லக்னோ அணி 2வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மறுபுறம் கொல்கத்தா அணி ப்ளே வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Leave A Reply

Your email address will not be published.