குஜராத்தை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது பெங்களூர் அணி !!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 62* ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் மிக கடுமையாக சொதப்பிய விராட் கோலி, இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 40* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரில் இலக்கை எட்டிய பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. அதே வேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.