பிரதமர் மோடி வருகை… சென்னையில் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்க்கவும் – போக்குவரத்து காவல்துறை

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வருகிறார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தர உள்ளார். இதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்கவரத்து மெதுவாக இருக்கும்.

ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.