ஈழத்து இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்.

ஈழத்து இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் கடந்த 22ம் திகதி காலமானார்

1942 ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்தவர். தமிழ் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றி, பகுதித் தலைவர், கனிஸ்ட அதிபர், உபதிபர், தொலைக் கல்விப் போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002 ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.

1964 ல் ’விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ என்ற சிறுகதையுடன் இவரது எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது.
சுமார் 150 சிறுகதைகள், 10 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்பாக்கங்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவரது இலக்கியப் பணிக்காக இலங்கை அரசு ‘சாகித்யரத்னா’(2013), வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’ (2008), இலங்கை இந்து கலாசார அமைச்சு ’கலாபூஷணம்’(2003) என்பவற்றை வழங்கி இவரைக் கௌரவித்துள்ளன.

இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’ பரிசையும், ’மரக்கொக்கு’ நாவல் இலங்கை அரசினதும், வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும், ’காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதையும், ‘குடிமைகள்‘ நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதையும், ‘சிதைவுகள்’ குறுநாவல் தேசிய கலை இலக்கியப் பேரவை பரிசையும், சுபமங்களா பரிசையும், சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதையும், ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத் தொகுதி ‘கொடகே’ விருதையும் பெற்றுள்ளன.

சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் இள வயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தளகர்த்தர்களுள் ஒருவர். சங்கத்தின் யாழ் கிளைச் செயலாளர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து சாதியத்துக்கெதிரான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு சமூக விடுதலைப் போராளி.

ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்கள் மீது பரிவு கொண்டு அவர்களது விடுதலைக்காக தனது படைப்பாளுமையை அர்ப்பணித்தவர்.
ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயமே அவரது இலட்சியமாக இருந்தது. அவரது இழப்பு பேரிழப்பாகும்.

எமது அஞ்சலிகள்

– Murugesu Anatharadsagan

Leave A Reply

Your email address will not be published.