ரூ.2,000 புழக்கம் தொடா்ந்து குறைந்து வருகிறது: ஆா்பிஐ

கடந்த சில ஆண்டுகளாக ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் தொடா்ந்து குறைந்து வருவதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாத இறுதி வரையில் ரூ. 2000 எண்ணிக்கையிலான புழக்கம் 214 கோடிக்கு குறைந்துள்ளதாக ரிசா்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்படுள்ளதாவது:

புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை நிகழாண்டு மாா்ச் வரையில் 13,053 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு 12,437 கோடியாக இருந்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

2020-இல் ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கையிலான புழக்கம் 274 கோடியாக (2.4%) இருந்தது. இது 2021-இல் 245 கோடி (2%), 2022, மாா்ச் வரையில் இது 214 கோடியாக (1.6%) உள்ளது.

புழக்கத்தின் அடிப்படையிலான ரூ.2000 நோட்டின் மதிப்பு 2020-இல் 22.6 சதவீதத்தில் இருந்து 2021-இல் 17.3 சதவிதமாகவும், 2020-இல் 17.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

முந்தைய ஆண்டு 3,867.90 கோடியாக இருந்த ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை வகையிலான புழக்கம் நிகழாண்டு மாா்ச் வரையில் 4,554.68 கோடியாக உயா்ந்துள்ளது.

அதிகப்படியான எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளாக ரூ.500 (34.9%). அடுத்தபடியாக ரூ.10 (21.3%) உள்ளது.

புழக்கத்தின் அடிப்படையிலான ரூ.500 நோட்டின் மதிப்பு 2021-இல் 60.8 சதவீதத்திலிருந்து 2022-இல் 73.3 சதவீதமாக உயா்ந்துள்ளது.

புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நிகழாண்டு ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.28.27 லட்சம் கோடியாக இருந்தது.

ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தில், ரூ.2000, ரூ.500 நோட்டுகள் மட்டும் நிகழாண்டில் 87.1 சதவீதம் உள்ளது. இது கடந்த ஆண்டு 85.7 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்க 2016, நவம்பா் 8-ஆம் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. பின்னா் ரூ.200 நோட்டுகள் புதிதாக வந்தன.

2018-இல் 336.3 கோடி எண்ணிக்கையில் ரூ.2,000 நோட்டுகள் இருப்பதாகவும், 2018 முதல் புதிதாக ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததால் ரூ.2000 நோட்டுகளின் புழக்க எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்திருந்தாா்.

மேலும், ரூபாய் நோட்டுகள் சேதமடைவதாலும் புழக்கத்தில் இருந்து குறைவதற்கு ஒரு காரணம் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

எனினும், தற்போது ஆண்டுதோறும் ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதற்கு ரிசா்வ் வங்கி எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.

ரூ. 2,000 புழக்க எண்ணிக்கை

2020- 274 கோடி (2.4%)

2021-245 கோடி (2%)

2022- 214 கோடி(1.6%)

Leave A Reply

Your email address will not be published.