தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? புதிய கட்டணம் பரிந்துரை

தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்று இருந்தது. அத்துடன், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் எனவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், விலைவாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதே சமயம் ஓலா, உபேர் உள்ளிட்ட தனியார் செயலி வழி நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கின. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இத்தகைய செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. இதை பயன்படுத்தி செயலி நிறுவனங்கள் ஓட்டுனர்களிடம் அதிக கமிஷன் வசூலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து ‘டிஜிட்டல் மீட்டர்’ வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று, அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில், ஆட்டோக்களுக்கான மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து, ஆட்டோ கட்டணத்தை மறுவரையரை செய்ய குழு அமைக்கப்பட்டது. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டுள்ள இணை போக்குவரத்து ஆணையர் தலைமையிலான அந்த குழு, போக்குவரத்து துறைக்கு உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை பரிந்துரைத்துள்ளது.

அதன்படி 1.5 கிலோ மீட்டருக்கு உள்ளான துாரத்திற்கு கட்டணமாக 40 ரூபாய் எனவும், கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கட்டணம் குறித்த இறுதி முடிவை அரசு எடுக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் விரைவில் ஆட்டோ கட்டணம் அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆட்டோ கட்டணமும் உயர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.