பிரச்சினைக்குத் தீர்வு காண ஆட்சி மாற்றம் மிக அவசியம் – சம்பந்தன் திட்டவட்டம்.

“நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்கு இன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமெனில் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம். இது மக்களின் பிரதான வேண்டுகோளாக இருக்கின்றது.

ஏனெனில், இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டார்கள் என்று நான் கருதுகின்றேன்.

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் நிச்சயமாக அரசில் மாற்றம் ஏற்பட வேண்டும். தற்போதைய அரசால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. அது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

நாட்டினதும் மக்களினதும் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் திடசங்கற்பத்துடன் செயற்பட்டு ஒருமித்த தீர்மானங்களை எடுத்தால்தான் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சமூகமும் இந்தக் கருமத்தில் அக்கறை காட்டும் என்று நான் நம்புகின்றேன்.

ஏனெனில் தற்போதைய ஆட்சியில் ஒரு மாற்றம் ஏற்பட்டால்தான் சர்வதேச சமூகத்துக்கு எமது நாட்டின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். சர்வதேச சமூகம் சகல வழிகளிலும் எமது நாட்டுக்கு உதவிகளையும் வழங்கும்.

அவ்விதமான ஓர் ஆட்சி மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது மிகவும் கஷ்டமான விடயம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.