கொழும்புக்கு சமைத்த உணவு-தோட்டப்புறங்களுக்கு பயிர் செய்ய காணி உணவு பிரச்சினை பற்றிய கூட்டத்தில் பிரதமரிடம் மனோ-திகா.

உணவு பிரச்சினை பற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டிய கூட்டத்தில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்பி ஆகியோர் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள மலைநாட்டு தோட்டங்களில் உள்ள தரிசு காணிகளை தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், கொழும்பு நகரில் தொடர்மாடிகளில் மற்றும் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு, நிலைமை சீராகும்வரை சமைத்த உணவு பொதிகள் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவு நெருக்கடி பற்றிய கலந்துரையாடலில் பிரதமருடன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்பி, சம்பிக்க ரணவக்க எம்பி, திஸ்ஸ அத்தநாயக்க எம்பி, நிமல் லான்சா எம்பி, சாகல ரத்னாயக்க, நவீன் திசாநாயக்க, செந்தில் தொண்டமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் எம்பி மனோ கணேசன் பின்வரும் ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றினார்.

கொழும்பு மாநகரம்

கொழும்பு மாநகரத்தில் பின்தங்கிய தொடர்மாடிகளிலும், குடியிருப்புகளிலும் வாழ்கின்ற குடும்பங்கள் போதிய வருமானம் இல்லாமலும், உணவு சமைக்க எரிவாயு, மண்ணெண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாமலும் தவிக்கின்றனர். அடுத்த சில மாதங்களுக்கு, நிலைமை சீராகும் வரை, ஒரு நாளைக்கு ஒரு முறையேனும், இவர்களுக்கு சமைத்த உணவு பொதிகளை வழங்க வேண்டும். இதற்கு கொழும்பு துறைமுக சமையல் கூடத்தையும், கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான சமையல் கூடங்களையும் பயன்படுத்தலாம். இதற்கான பொறுப்பை இராணுவ சமையல் பிரிவுக்கு வழங்கலாம். இந்த திட்டத்தை உடன் நடைமுறை படுத்துங்கள்.

மலைநாட்டு தோட்ட மக்கள்

மலைநாட்டில் தோட்டங்களில் மக்கள் போதிய வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். 2021 ஜனவரியில் சுமார் ரூ.190 ஆக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமானம், இன்று 2022ல் சுமார் ரூ.360 ஆக உயர்ந்து விட்டது. ஆகவே ஏற்றுமதியாளர்களின் வருமானம் இலங்கை ரூபாவில் 90 விகிதம் அல்லது ஏறக்குறைய இரு மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால், இந்த உயர்ந்த மேலதிக வருமானத்தை இந்த ஏற்றுமதி விளைபொருளை உற்பத்தி செய்யும் தொழிலார்களுடன் பகிர்ந்து கொள்ள தோட்ட நிறுவனங்கள் தயார் இல்லை. 2021 ஜனவரியில் தந்த அதே அடிப்படை சம்பளம் ரூ. 900 தான், இன்று 2022லும் வழங்கப்படுகிறது. இதென்ன நியாயம்?

ஆகவே ஒன்றில் சம்பளத்தை அதிகரித்து, தொழிலாளர்களின் வாங்கும் சக்தியை கூட்டுங்கள் அல்லது மலைநாட்டு தோட்டங்களில் உள்ள தரிசு காணிகளை தோட்ட மக்களுக்கு வழங்கி, தங்கள் உணவு பொருட்களை வளர்க்க அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.

Leave A Reply

Your email address will not be published.