இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்தூர்மலையில் புத்தர் சிலை சபையில் சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு.

தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை அபகரிக்கும் அரசு சிங்கள மக்களுக்கு மட்டுமே விவசாயம் செய்யும் உரிமையை வழங்க முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்தூர்மலையில் புத்தபகவான் சிலையை நிறுவும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

“1932ஆம் ஆண்டு குருந்தூர்மலை தொல்லியல் இடம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது. ஆனால், 2020 ஆம் ஆண்டு குருந்தூர்மலை தேவ விகாரை எனக் கூறிய புத்தர் சிலை வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்களவர்கள் இல்லாத, பௌத்தர்கள் இல்லாத இங்கு புத்தர் சிலை வைப்பதன் முக்கிய நோக்கம் சிங்களக் குடியேற்றம் மட்டுமே. இதனைத் தற்போதைய நெருக்கடியில் இலங்கைக்கு உதவும் நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தண்ணிமுறிப்பு மக்கள் 78 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயக் காணிகளை ஆக்கிரமிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

1956 – 1957 ஆண்டு காலப்பகுதியில் அவ்வப்பிரதேச செயலகங்கள் ஊடாகவே இந்தக் காணி உரிமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதனையே தற்போது ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகின்றது.

தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில்அனைத்து மக்களையும் விவசாயம் செய்யுமாறு கூறும் அரசு தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை மட்டும் அபகரிக்க்கப் பார்க்கின்றது. இதன்மூலம் சிங்கள மக்கள் மட்டுமே விவசாயம் செய்ய வேண்டும் என்று அரசு நினைக்கின்றது.

இதேவேளை, ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் குருந்தூர்மலை புத்தர் சிலை விவகாரத்தை கருத்தில் எடுக்காமல் இருப்பது ஏன்? அவர்களின் போராட்டம் உணவுக்கும் எரிபொருளுக்கும் மட்டும்தானா? தமிழர்களின் இனம் அழிக்கப்படுகின்றது. நிலம் பறிக்கப்படுகின்றது. கலாசாரம் சிதைக்கப்படுகின்றது. இவை தொடர்பிலும் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களும் இலங்கைக்கு உதவும் நாடுகளும் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.