’21’ சட்டமூலத்தின் இறுதி நகல் இன்றைய அமைச்சரவையில்! அங்கீகாரம் கிடைத்ததும் வர்த்தமானியில் பிரசுரம்.

அரசமைப்புக்கான 21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று மாலை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் அதனை இன்றிரவு வர்த்தமானியில் பிரசுரிக்கவுள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தேச சட்டமூலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்கள் மாற்றப்படுவதோடு பிரதமரின் ஆலோசனையுடனே ஜனாதிபதி அனைத்து விடயங்களையும் எடுக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிக்கவும் பிரேரிக்கப்பட்டுள்ளதோடு சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நாடாளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப்படக்கூடிய திருத்தங்களே இந்த சட்டமூலத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசமைப்பின் 21 ஆவது திருத்த யோசனை தனிநபர் பிரேரணையாக ஐக்கிய மக்கள் சக்தியால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் வர்த்தமானியிலும் வௌியிடப்பட்டது. இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் 21 ஆவது திருத்த யோசனை அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது . இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற குழுக்களுடனும் சிவில் அமைப்புகளுடன் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கடந்த நாட்களில் ஆராய்ந்தார்.

இதன்படி திருத்த நகலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த திருத்தமும் இதில் உள்ளடக்கப்பட்டது என அறியவருகின்றது. இந்த யோசனை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு புதிய நகல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டது என நீதி அமைச்சு தெரிவித்தது.

இந்தநிலையில் இறுதி சட்ட நகல் நீதி அமைச்சரால் இன்று மாலை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது என அரச வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படும் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. அதன் பின்னர் இன்றிரவு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.