அரபு நாடுகளிடமிருந்து சஜித்தால் இலங்கைக்கு எரிபொருள் கொண்டு வர முடியுமா ……

அன்றைய ரணசிங்க பிரேமதாச ஆட்சியின் போது போது இலங்கையில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என எரிபொருள் அமைச்சர் ஜனாதிபதி பிரேமதாசவிடம் தெரிவித்தார்.

அந்தச் செய்தி கிடைத்தவுடனே,ரணசிங்க பிரேமதாச எப்படி இயங்கி, அந்த பிரச்சனையை தீர்த்தார் என்பது குறித்து , இலங்கையின் முஸ்லிம் உறவுகள் பற்றி எழுதி வந்த பிரபல கட்டுரையாளரான லத்தீப் பாரூக், 2022.06.17 அன்று ‘டெய்லி எப்டி’ நாளிதழில் எழுதியிருந்தார்.

“இலங்கைத் தலைவர்களுக்கும் மத்திய கிழக்குத் தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான உறவு குறித்து நான் நல்லதொரு உதாரணத்தை சொல்வேன்.

பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஒன்று உருவாக இருந்தது. அதை அறிந்ததும் , அன்றைய இலங்கைக்கான ஈராக் தூதுவராக இருந்த அப்து அலியை, பிரேமதாசா அலரி மாளிகைக்கு வருமாறு அழைத்து , நாட்டில் ஏற்படவிருந்த பிரச்னையை அவரோடு விவாதித்தார்.

அப்போது மணி இரவு 8.30.

பிரேமதாசவின் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த தூதுவர், இப்போது ஈராக்கில் இரவாகிவிட்டது, மறுநாள் ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவரை அழைத்து நல்ல பதில் ஒன்றை பெற்றுத் தருவதாகக் கூறினார்.

காலைவரை பொறுக்கத் தேவையில்லை. என்னிடம் ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவரது தொலைபேசி எண் இருக்கிறது. நான் அவரோடு உங்களை பேச வைக்கிறேன். அவருக்கு விடயத்தை சொல்ல முடியுமா? எனக் கேட்டார்.

பிரேமதாசவிடம் ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவன தலைவரின் தொலைபேசி எண் இருந்ததைக் கண்டு ஈராக் தூதுவர் அதிர்ச்சியடைந்தார். பிரேமதாச, எண்ணெய் நிறுவனத்தின் தலைவரை தொலைபேசியில் அழைத்து, தூதுவரிடம் இப்போது பேசுங்கள் எனக் கூறினார்.

வியந்து போன தூதர், ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவரோடு பேசினார்.

‘இலங்கை எங்கள் சகோதர நாடு. பாஸ்ரா துறைமுகத்தில் இருந்து இரண்டு எண்ணெய் டேங்கர்கள் நாளை புறப்பட உள்ளன. அந்த இரண்டு கப்பல்களும் வேறு நாட்டிற்குச் செல்கின்றன. உடனே அதை இலங்கைக்கு திருப்பிக் அனுப்பிவிட்டு , மேலும் சில கப்பல்களை அனுப்புகிறேன்.’ என்றார் ஈராக்கின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர்.

இதுதான் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு…”

லத்தீப் பாரூக் சொன்ன கதை இது.

பிரேமதாச இப்படியான தொடர்பை வெறுமனே ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இலங்கையிலிருந்த இஸ்ரேலிய மொசாட் புலனாய்வுப் பிரிவினரை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.

ஆனாலும் அவர் அரபு நாடுகளின் அடிமையாக இருக்கவில்லை. ஈராக் நாடு , குவைத்தை ஆக்கிரமித்தபோது அதையும் அவர் கண்டித்தார்.

பிரேமதாச மட்டுமல்ல மகிந்தவும் அரபு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

இலங்கை – பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அரபு நாடுகளின் மனதை வென்றிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களில் அரபு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்து வாக்களித்தன.

அதற்காக அரபு நாடுகளுடன் பேச அமைச்சர் பௌசியாவை மஹிந்த அனுப்பினார்.

மனித உரிமைகள் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பாதுகாப்பு அமைச்சருமான, துணைப் பிரதமருடன் ஃபவ்ஸி பேசினார். இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சவூதி அரேபியா ஃபவ்ஸிக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றியது.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த, சவூதி இளவரசருக்கு தனது நன்றிக் கடிதத்தை ஃபௌசியின் கையில் அனுப்பினார்.

அப்படியான மஹிந்த 1970-77 காலப்பகுதியில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது மத்திய கிழக்கு நாடுகளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனாலும் அளுத்கம முஸ்லிம் கலவரம் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதும், அதன் பின்னணியில் இருந்த சிங்கள அமைப்புகள் மகிந்த ஆதரவு அமைப்புகளாக இருந்ததையும் , அவர்களை மகிந்தவின் அரசே பாதுகாத்ததையும் கண்ட அரேபிய நாடுகள் , மகிந்தவின் அரசு மேல் விரக்தியடைந்தன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளை இலங்கைக்கு எதிராக வாக்களிக்க அமெரிக்கா நிர்ப்பந்தித்த போதும் , அதை ஏற்காது இந்த குட்டி இலங்கையை ஆதரிக்க அரபு நாடுகள் முடிவு செய்த போதும் இச் சம்பவங்கள் இலங்கை மேல் அதிருப்தியை உருவாக்கியது.

எவ்வாறாயினும், 2019 ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், மஹிந்தவின் பொதுஜன பெரமுன அனைத்து முஸ்லிம் நாடுகளையும் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தியது.

மகிந்தவின் பொதுஜன சன்னிதானய தலைவர்களில் ஒருவராக இருந்த உதய கம்மன்பில முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் பரவுவதை தடுக்க முன்வைத்த முக்கிய நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.

இன்று எண்ணெய் பணத்தில்தான் இஸ்லாமிய தீவிரவாதம் விதைக்கப்படுகிறது. எனவே, எண்ணெய் பணம் பெறும் இந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும்….’

உதய் கம்மன்பில
15.03.2015


அதே, உதய கம்மன்பில, எரிபொருள் அமைச்சரான போது , அவருடைய மனைவியோடு முக்காடு போட்டுக் கொண்டு சென்று எண்ணை வளத்தில் பணம் சம்பாதிக்கும் அரேபிய நாடுகளிடம், கோட்டாபயவின் அரசாங்கத்திற்கு எண்ணெய் தருமாறு கையேந்தி நின்றார்.

2021இல் கோட்டாவின் ஒரு நாடு ஒரு சட்டத்தை கொண்டு வந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசாரவால் எண்ணெய் பணம் வழங்கும் பயங்கரவாத அமைப்பு என சொல்லி தடை செய்யப்பட்ட ‘கத்தார் தொண்டு அமைப்பு’ நாடான கத்தாரிடம் எண்ணெய் பிச்சை எடுக்க எரிபொருள் அமைச்சரான காஞ்சனா விஜேசேகர இன்று சென்றுள்ளார்.

இந்த கட்டார் தொண்டு நிறுவனத்திற்கும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த, சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நல்லதொரு நட்புறவு இருந்தது. இந்த கட்டார் தொண்டு அமைப்பின் பிரதான உரைக்கு சஜித் பிரேமதாசவை அழைத்ததாக கலகொடஅத்தே ஞானசார தேரர் சஜித்தை கீழ்வருமாறு தாக்கத் தொடங்கியிருந்தார்.

“மார்ச் 3, 2018 அன்று ‘கத்தார் சாரட்டி’ என்ற அமைப்பை தொடங்க உள்ளார்கள். அதன் தலைமை உரையாற்றுபவர் யார்? சஜித் பிரேமதாச. நமது எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் இவர்கள் பாவம். இவர்களா நாட்டை வழிநடத்த போகிறார்கள் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதோ சஜித் பிரேமதாச கத்தார் தொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிற படம். இதுதான் …” என விசமத்தை கக்கினார்.

இந்தக் கதையை கலகொட அத்தே ஞானசார தேரர் கூறும்போது, ​​அதை ராஜபக்சவுக்கு ஆதரவாக முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தூண்டிய தனியார் ஊடகங்கள் பரப்புரை செய்து கூத்தாடின. ஞானசார தேரரின் காணொளியைக் காட்டி, ‘கட்டார் தொண்டு’ என்ற பயங்கரவாத அமைப்புக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் உள்ள தொடர்பு என கதை கதையாக பரப்புரைகளை செய்து நாடு முழுவதும் தீ மூட்டப்பட்டது.

இப்போது காஞ்சன விஜேசேகர, றிசாத் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அரசாங்க சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் கத்தாருக்கு எண்ணெய் கொள்வனவு செய்ய போய் , கத்தார் அறக்கட்டளையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குங்கள் என்று ஆலோசனை வழங்கும் கலகொடஅத்தே ஞானசார தேரரின் , ஜனாதிபதி கோட்டாபய, இந்த இருவரையும் கட்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எண்ணெய் கொள்வனவு செய்ய அனுப்பியுள்ளார்.

இலங்கையில் இந்த எண்ணெய் நெருக்கடி ஆரம்பமான போது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை சந்தித்தார்.

சந்திப்பிற்குப் பிறகு, பல முஸ்லிம் நாடுகள் தனது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். இதைப் பார்த்து ராஜபக்சேவின் சமூக ஊடகங்களும், ராஜபக்சேவின் அந்தரங்க ஊடகங்களும் நையாண்டி செய்தன.

இன்றைய நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் இலங்கை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடியவர் சஜித் பிரேமதாச என்பதை லத்தீப் பாரூக்கின், ரணசிங்க பிரேமதாச குறித்த சம்பவம் மற்றும் சஜித் பற்றிய ஞானசார தேரரின் அம்பலப்படுத்தல்கள் மூலம் தெளிவாகிறது.

ஆனால் அது ராஜபக்சக்களின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அல்ல, சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் அல்லது மக்கள் வாக்கு மூலம் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் கீழ் என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ளாத வரை, மக்கள் எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கவே வேண்டியிருக்கும்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.