தமிழகத்தில் பரவி வரும் BA5 வகை கொரோனாவின் அறிகுறிகள், பாதிப்புகள் என்ன?

தமிழகத்தில் தற்போது அதிகமாக பரவி வருவது ஒமைக்ரானின் ஒரு வகையான BA5 கொரோனாவாகும். ஏப்ரல் மாதத்தில் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 5% மட்டுமே இருந்த BA5 வகை ஜூன் மாதத்தில் 30% ஆக அதிகரித்துள்ளது.

இந்த வகை கொரோனாவினால் பொதுவாக தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும் இதன் பிரத்யேக அறிகுறிகளையும் யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

BA5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும். தொண்டை வலியும் உடல் வலியும் கடுமையாக இருக்கும். கடந்த அலைகள் போல் அல்லாமல் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன், எக்ஸ் ரே எடுக்க பரிந்துரைப்பதில்லை என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவிக்கிறார்.

ஆறு பேர் தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் மூன்று பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்றும் கூறுகிறார். தடுப்பூசி ஒரு டோஸ் கூட செலுத்தாவர்களுக்கு நோய் தீவிரமாக உள்ளது எனவும் கூறுகிறார்.

பூஸ்டர் டோஸ் போடாத இணை நோய்கள் கொண்ட முதியவர்களுக்கு புதிய வகை கொரோனா, டெல்டா போன்ற தீவிர பாதிப்பையே ஏற்படுத்துவதாக தொற்று நோய் நிபுணர் சுரேஷ்குமார் கூறுகிறார். அதே போன்று இளைஞர்கள் குறைந்தது இரண்டு டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார். நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள், வெளியூர் பயணம் மேற்கொண்டவர்களுக்கே முதலில் ஏற்படுகிறது எனவும் அவர்கள் மூலம் பிறருக்கு பரவுகிறது எனவும் கூறுகிறார்.

எத்தனை முறை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் எத்தனை முறை கொரோனா வந்திருந்தாலும் மீண்டும் பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்றும் எனவே அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று தொற்று நோய் நிபுணர் மருத்துவர் சுரேஷ்குமார் கூறுகிறார்.

தற்போது பரவும் கொரோனா வகை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தினாலும் மறதி, நுரையீரல் திறன் குறைதல் உட்பட நீண்ட கால பாதிப்புகள் என்னென்ன ஏற்படும் என யாருக்கும் தெரியாததால் தொடர்ந்து முக கவசம் அணிந்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகும்.

Leave A Reply

Your email address will not be published.