பலாலி விமானமும் இல்லை, காங்கேசன்துறை கப்பலும் இல்லை: நடராசா லோகதயாளன்

இல்லாததை இருப்பது போலவும், முடியாததை முடியும் என்பது போலவும், போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவது இலங்கை ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலை போலுள்ளது.

பலாலி விமானமும் இல்லை, காங்கேசன்துறை கப்பலும் இல்லை, அடுத்து யாழ் கிளிநொச்சி போக்குவரத்தாவது இடம்பெறுமா என்ற ஏக்கத்தில் இரு மாவட்ட மக்களும் உள்ளனர்.

பலாலி விமான சேவை யூலை மாதம் 1ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நிமால் சிறிபாலடீசில்வாவும் தெரிவித்தனர். இத்தோடு காங்கேசன்துறை காரைக்கால் கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி விட்டது விரைவில் கப்பல் சேவை என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா. எவையுமே இன்றுவரை இடம்பெறவில்லை. இவற்றை கூறிய காலப் பகுதியில் வராது என்பதும் அதிலும் குறிப்பாக கப்பல் சேவை வரவே வராது என்பதும் முன்னரே தெரிந்த விடயம். ஏனெனில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூலை முதலாம் திகதி தொடக்கம் சென்னை, திருச்சி விமான சேவை இடம்பெறும் என இலங்கை போக்கு வரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடீசில்வா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதன் முன்னிலையில் பலாலி விமான நிலையத்தில் வைத்து யூன் மாதம் 18ஆம் திகதி அன்றுதான் தெரிவித்தார்.

இந்த விடயம் 2022-06-13ஆம் திகதிய அமைச்சரவையில் விமான சேவையை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நிரஞ்சனின் கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் முன் வைத்தபோது நிமால் சிறீபாலடீசில்வா நேரில் வந்து பார்வையிட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வார் என்றபோதே இதோ விமானம் வந்து விட்டது என்பதுபோல் அமைச்சரின் விசுவாசிகள் அறிக்கை விட்டனர்.

ஆனால் 2019ஆம் ஆண்டின் பட்டறிவை வைத்து கனடாவின் உதயனில் நான் 2022-06-16 அன்றே தெளிவாக செய்தியிட்டேன் ‘ பலாலிக்கு விமானம் வரும் ஆனால் வராது ` என்று. அதாவது அமைச்சர்கள், ஆதரவாளர்கள், அரச விசுவாசிகள் வாயால் விடும் விமானம்தான் வரும். நியமான விமானம் இந்தக் காலத்தில் வரவே வராது என்பதே அதன் உண்மையாக அமைந்து விட்டது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் கும்பாபிசேகத்தை காரணம் காட்டி அன்று முதல் விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டதனால் ஜூலை முதலாம் திகதி தீர்மானிக்கப்பட்டது. கும்பாபிசேகம் 6ஆம் திகதிவரை இடம்பெற்றது. அன்றைய தினம் வரையிலும் ஒரு விமானமும் வரவில்லை. பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காதமைக்கு இந்தியாவே காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் காக்கை தீவுப் பகுதியில் புதிதாக அமைக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்தியாவில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது, இதனால் விமானங்கள் இங்கு வந்துவிட்டு திரும்பி செல்வதற்கு எரிபொருள் இல்லை. அத்துடன் இந்தியாவில் இருக்கக்கூடிய சில சட்டச் சிக்கல்கள் காரணமாகவும் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த விமான சேவைக்கு இலங்கை அரசு தனது பூரணமான ஒத்துழைப்பினையும், அங்கீகாரத்தினையும் வழங்குகிறது. இந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவைகள் தொடரும் என்றார். ஆனால் உணமை அதுவல்ல.

பலாலி விமான சேவையில் உள்ள தடைகள்

பலாலி விமான நிலையத்திலிருந்து பயணிகள் சேவைகள் தொடங்கும் போது இங்கிருந்து சேவை நடாத்தக்கூடிய விமானத்திற்கு இன்றைய இலங்கை அரசால் அதற்கான எரிபொருளைக்கூட வழங்கும் வல்லமை கிடையாது. இதேநேரம் தனியார் விமானம் என்னும் தற்கலிக வாடகை விமானத்தை ஒருவர் இயக்குவதானால் அதிலே வரி நெருக்கடியும் உண்டு. அதாவது நிரந்நர விமானம் ஒன்றை இந்தியாவில் இயக்குவதானால் விமானச் சிட்டையின் பெறுமதியின் 5 வீதம் வரியாகச் செலுத்த வேண்டும். இதுவே வாடகை விமானம் எனில் விமானச் சிட்டைப் பெறுமதியின் 18 வீத வரி செலுத்த வேண்டும் என்பதனால் விமானச் சிட்டையின் பெறுமதி அதிகரிக்கும்.
ஒப்பீட்டளவில் இதை நோக்கும் போது, கொழும்பிலிருந்து சென்னைக்கு சாதாரண விமானத்தில் சென்றுவரும் இருவழி கட்டணத்தைவிட, பலாலியிலிருந்து சென்னைக்கு தனியார் விமானத்தில் சென்றுவர இருவழி கட்டணம் கூடுதலாகும்.

இதனால் பலாலி சென்னை இடையே நிரந்தர விமான சேவை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன் நகர்த்தப்படுகின்றது. இதேநேரம் பலாலி விமான நிலையம் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்டபோதும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் கொரோனாவின் பெயருடன் மூடப்பட்டது. இதனால் வாடகை விமானமோ அல்லது நிரந்தர விமானமோ இன்னுமோர் நாட்டில் இருந்து வருவதானால் இந்த விமான நிலையம் தற்போதும் இயங்கு நிலையில் உள்ளது என இலங்கை விமானப் போக்கு வரத்து அதிகார சபை உறுதிப்படுத்தல் ஆவணம் ஒன்று வழங்க வேண்டும். இந்த ஆவணத்தினை உடன் ஏற்பாடு செய்து வழங்குமாறு அமைச்சர் 18ஆம் திகதியே பலாலியில் வைத்து அதிகார சபையின் தலைவரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பணிப்புரை வழங்கியபோதும் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியே அந்த ஆவணம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பின்பு இந்த ஆவணத்தை பெற்ற டில்லி அரசு நிரந்தர விமான சேவையை நடாத்துவதற்கான விண்ணப்பத்தை அவசர அவசரமாக 4ஆம் திகதியே பூர்த்தி செய்து அதனை அனுப்ப முயன்றபோது அனுப்பினால் ஏற்படும் கால தாமதம் சுட்டிக்காட்டப்பட்டு ஏற்பாட்டாளர் ஒருவரின் கையிலேயே கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி அதற்கான பணிகள் மேற்கொண்டு சேவை வருவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

அமைச்சரின் எரிபொருள் கூற்று

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுவது போன்று இந்தியாவில் எரிபொருள் பிரச்சினை என கூற முடியாது. ஆனால் எரிபொருள் பிரச்சணை இலங்கையில்தான் ஏற்படுகின்றது. அது எவ்வாறு எனில் ஒரு விமான சேவை இடம்பெறுகின்றபோது எந்த விமான நிலையத்தை நோக்கி விமானம் பறந்தாலும் செல்லும் விமான நிலையம் வரையுமான சேவைக்கான எரிபொருளை மட்டும் நம்பி பறப்பில் ஈடுபட முடியாது. எந்த விமான நிலையத்தை நோக்கி விமானம் பறக்கின்றது அந்த விமான நிலையத்தில் ஓர் திடீர் இடையூறு ஏற்பட்டால் விமானத்தை எந்த நேரத்திலும் வேறு ஒரு விமான நிலையத்தை நோக்கி திருப்ப வேண்டும் அதற்கு போதிய எரிபொருள் விமானத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதுவே சர்வதேச அளவில் கடைப்பிடிக்கபடும் முறையாகும்.

இலங்கை இந்திய விமான சேவையில் எரிபொருள் பிரச்சணை எவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டதெனில் இலங்கையின் தற்போதைய லட்சணம் தெரிந்த இந்திய விமானங்கள் இந்தியாவில் புறப்பட்டு பலாலியில் இறங்கி மீண்டும் சென்னை அல்லது திருச்சிக்கான எரிபொருளையும் எடுத்து வரும் ஏற்பாட்டுடனேயே பறப்பில் ஈடுபடத் தயார் படுத்தப்பட்டது. இலங்கையில் எரிபொருள் இல்லை அல்லது உரிய நேரத்தில் கிடைக்காது என்கிற யதார்த்தத்தை இந்திய விமான நிறுவனங்கள் உணர்ந்துள்ளன.

இதனால் இந்தியாவில் இருந்து பலாலி வரும் விமானம் பலாலியில் இறக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும் இன்னுமோர் விமான நிலையத்திற்கு திருப்புவதற்கு மோதுமான எரிபொருள் கண்டிப்பாக கையிருப்பில் இருக்கும். அதேநேரம் திரும்பிச் செல்லும்போது சென்னை அல்லது திருச்சியில் இறக்க முடியாத சூழல் ஏற்பட்டால் வேறு விமான நிலையத்திற்கு திருப்ப எரிபொருள் போதுமா என்பதிலேயே கேள்வி எழுப்பப்பட்டு விமானிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களின் திருப்திகரமான பதிலை தற்போது இந்தியத் தரப்பு பெற்றுள்ளது. ( இலங்கை அல்ல) ஆகையினால் இனி பணிகள் முன் நகர்த்தப்படும்.

காங்கேசன்துறை காரைக்கால் கப்பல் சேவை

இந்தியாவில் இருந்து வரும் விமானத்திற்கு பெரும் அக்கப்போர் காணப்பட்டாலும் கப்பலில் இவ்வளவு நெருக்கடி நிலைமை காணப்படவில்லை. இருந்தபோதும் கப்பல் சேவை கண்டிப்பாக வரவே வரமாட்டாது என்பதும் திடமானது.

கப்பல் சேவை நடாத்தினால் பயணிகள் சேவையின்போது ஒரு பயணிக்கு இரு வழிக் கட்டணமும் 45 ஆயிரம் ரூபாவினை மட்டுமே அறவிட ஏற்பாட்டாளர் தயாராகவுள்ளார். ஆனால் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு கை கொடுப்பது போன்று 75 கிலோ முதல் 100 கிலோ வரை அனுமதிக்கவும் கப்பல் நிறுவனம் தயாரகவுள்ளது. இதனால், அனைத்து பயணிகளும் கப்பலை நாடுவது மட்டுமன்றி இலங்கையில் இன்று அதிக சுற்றுலாப் மயணிகள் வரும் நாடாக இந்தியா இருக்கும் காலத்தில் கப்பலில் இந்த அளவு பொருள் எடுத்து வர முடியும் எனில் தென்னிலங்கை மக்கள் மட்டுமல்ல இந்தியர்களும் கப்பல் சேவையை நாடினால் தெற்கின் பொருளாதார நிலவரம் பின்னடையும் என அரசும் தென்னிலங்கை வர்த்தகர்களும் எண்ணுகின்றனர்.

பயணிகள் சேவைக்கு அப்பால் சரக்கு கப்பல் சேவையேனும் நடாத்தினாலும் நாட்டின் வடக்குப் பகுதி பொருளாதாரத்தில் வளர்ந்து விடும் என்ற இனவாதக் கண்கொண்டே இன்றும் பார்க்கப்படுகின்றது. இதனால் கப்பல் சேவை யார் குற்றியும் அரிசி வரும் சந்தர்ப்பம் இல்லை என பெயர் கூற அஞ்சிய உயர் அதிகாரிகள் இருவர் திடமாக தெரிவிக்கின்றனர்.

– யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்

Leave A Reply

Your email address will not be published.