ஜிஎஸ்டி வரியால் அரிசி, பால், தயிர் போன்ற பொருள்கள் இன்று முதல் விலை உயர்வு!

அரிசி, பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்தி 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய வரி விதிகள் வரும் திங்கட்கிழமை (ஜூலை 18) முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

எடையளவுச் சட்டத்தின் (Metrology Act), படி பேக் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாக விதித்து ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென கடந்த ஜூன் மாதமே ஜி.எஸ்.டி கவுன்சில் செய்தி வெளியிட்டது. விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் தற்போது 5 சதவீதமாக ஜி.எஸ்.டி விதித்து ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதைதவிர செக் புக்கிற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டியை வரியாக நிர்ணயித்துள்ளது. 12 சதவீதமாக இருந்த எல்.இ.டி பல்பிற்கான ஜி.எஸ்.டி, தற்போது 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும் மருத்துவமனைகளில், ஐ.சி.யூக்களை தவிர, ஒரு நாளைக்கு ரூ.5000 வரை வசூலிக்கும் அறைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மருத்துவமனைகளுக்கு ஜி.எஸ்.டிக்கு விலக்களிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரூ.1000 வரை வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு புதிதாக ஜி.எஸ்.டி விதித்து, அதை 12 சதவீத வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது ஜி.எஸ்.டி கவுன்சில். நாட்டின் பணவீக்க விகிதம் உயர்ந்து தற்போது 7 சதவீத்தில் உள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், இந்த ஜிஎஸ்டி வரி உயர்வை சற்று தாமதமாக கொண்டு வந்திருக்கலாம் என தொழிலதிபர் அர்ச்சித் குப்தா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.