சீனாவை முந்தும் இந்தியா , சனத்தொகை எண்ணிக்கையில் – சண் தவராஜா

எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி உலகின் சனத்தொகை 8 பில்லியனை எட்டும் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை இந்தியா அடுத்த வருடத்தில் பெற்றுக் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது. உலக சனத்தொகை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ.நா. திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள எதிர்வுகூறல்கள் மேலும் பல சுவாரசியமான தகவல்களைக் கொண்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் உருவாகிய நாள் முதலாக உலகின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டே வந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையோடு போராடி, விலங்குகளோடு விலங்குகளாக மனிதன் காடுகளில் வாழ்ந்த காலகட்டங்களில் வாழ்வே போராட்டமாக இருந்தது. தனது தேவைகள் யாவைக்குமாக மட்டுமன்றி உயிரைக் காப்பதற்காகவும் மனிதன் போராட வேண்டியிருந்தது. தக்கென பிழைக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலான இந்த வாழ்வியல் போட்டியில் தாக்குப்பிடித்த மனிதன் படிப்படியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலகைக் கட்டுப்படுத்த முடிந்த நாள் முதலாக மனித சனத்தொகையில் வளர்ச்சி ஏற்பட்டது. இயல்பான இனப்பெருக்கம் மூலம் உருவாகும் வளர்ச்சியையும் தாண்டி, தனது எதிரிகளை அடக்கியாளும் தந்திரங்களைத் தெரிந்து கொண்டதாலும், காடுகளில் இருந்து வெளியேறி கிராமங்களை உருவாக்கி விவசாயத்தை நோக்கி காலடியெடுத்து வைத்ததாலும் மனித வாழ்வு புதிய பரிமாணத்தை எட்டியது.

இதன் நீட்சியாக மனித சனத்தொகையில் ஏற்பட்ட கிரமமான அதிகரிப்பினால் ஒரு கட்டத்தில் உலக சனத்தொகை நூறு கோடியை எட்டியது. ஆனால், இந்த எண்ணிக்கையை இலட்சக்கணக்கான ஆண்டுகளின் பின்னரேயே மனித குலத்தினால் எட்ட முடிந்தது. ஆனால் இந்த இடத்திலிருந்து வெறும் 200 வருடங்களிலேயே மனித சனத்தொகை 700 கோடியாக அதிகரித்தது. கைத்தொழில் புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் உள்ளிட்ட பல காரணிகள் இத்தகைய துரித சனத்தொகை வளர்ச்சிக்கு அடிகோலின.

இத்தகைய சனத்தொகை அதிகரிப்பு 2030ஆம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050ஆம் ஆண்டில் 970 கோடியாகவும், 2100ஆம் ஆண்டில் 1,040 கோடியாகவும் இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் ஏற்படக் கூடிய உலக சனத்தொகை அதிகரிப்பில் அரைவாசி உலகின் எட்டு நாடுகளிலேயே அவதானிக்கப்படும் என்கின்றது இந்த ஆய்வு. ஆபிரிக்கக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து, எதியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளிலேயே இந்த அதிகரிப்பு நிகழ உள்ளது.

இன்றைய நிலையில் கிழக்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உலக சனத்தொகையில் 29 விழுக்காடு மக்கள் வசிக்கின்றனர். அதேபோன்று மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் 26 விழுக்காடு மக்கள் வசிக்கின்றனர். உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடுகளில் முன்னணியில் உள்ள சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்தப் பிராந்தியங்களிலேயே உள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தலா 140 கோடி மக்களைக் கொண்டுள்ள நிலையில், அடுத்த வருடத்தில் சீனாவை விடவும் அதிக மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உருவாகும் எனக் கூறப்படுகின்றது. பொதுவுடமை நாடான சீனாவில் அமுலில் இருந்த குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் 2006ஆம் ஆண்டில் திரும்பப் பெறப்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட்ட போதிலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் சீன மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்கிறன்றன அங்கிருந்து வெளிவரும் தகவல்கள்.

China Population growth

மறுபுறம், மிகவும் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள 46 நாடுகளில் அடுத்த 28 வருடங்களில் துரித சனத்தொகை அதிகரிப்பு நிகழும் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பல நாடுகளில் தற்போதைய சனத்தொகையை விடவும் இரு மடங்கு அதிகரிப்பு நிகழலாம் எனக் கூறப்படுகின்றது. இதனால் இந்த நாடுகளில் பல்வேறு வளப் பற்றாக்குறைகள் ஏற்படுவதுடன் அபிவிருத்திப் பணிகள் தடைப்படும் அபாயமும் உள்ளது.

உலக சனத்தொகையில் கிரமமான அதிகரிப்பு நிகழ்ந்து வந்தாலும் 1950ஆம் ஆண்டு முதலாக அந்த அதிகரிப்பில் ஒரு மந்த நிலை நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுவரை வெகு துரிதமாக இருந்துவந்த சனத்தொகை அதிகரிப்பு 2080 வரை மந்த நிலையில் இருக்கும் எனவும், அதன் பின்னான காலகட்டத்தில் சனத்தொகை அதிகரிப்பு மீண்டும் துரிதமாக அதிகரிக்கும் எனவும் தெரிய வருகின்றது.

அதேவேளை, சனத்தொகை அதிகரிப்பில் சமமற்ற தன்மை உலகளாவிய அடிப்படையில் அவதானிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம், வன்முறைகள், பாரபட்சமான நடத்தைகள் என்பவை இதற்கான காரணமாக உள்ள போதிலும், உலகளாவிய அடிப்படையில் மலட்டுத் தன்மை அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தன்மை கூட பிராந்தியங்களுக்குப் பிராந்தியம் வேறுபடுகின்றது.

உலகளாவிய அடிப்படையில் பிள்ளை பெறும் விகிதம் 2021ஆம் ஆண்டில் 2.3 ஆக இருந்தது. இந்த விகிதம் 2050இல் 2.1 ஆகக் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 இல் இந்த விகிதம் 5ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளில் இந்த விகிதம் வெகுவாக வீழ்ச்சிகண்டு வருகின்றது. 2050இல், உலகின் வளர்ச்சியடைந்த 61 நாடுகளில் இது வெறும் ஒரு வீதமாக இருக்கும் என்கின்றது இந்த அறிக்கை. தற்போதைய நிலையில் அதிகுறைந்த பிள்ளை பெறும் விகிதத்தைக் கொண்ட நாடாக சீனா உள்ளது. இங்கே 1.15 என்ற விகிதத்தில் ஒவ்வொரு பெண்ணும் பிள்ளை பெற்று வருகின்ற நிலையில், இந்த விகிதத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான எந்தவொரு அறிகுறிகளும் தென்படவில்லை.

பிள்ளைப் பேறு குறைவடைவதற்கான காரணங்களுள் ஒன்றாக தற்போதைய மனிதர்களின் மனோநிலையும் உள்ளது. தங்கள் பெற்றோரைப் போலன்றி குறைந்த எண்ணிக்கையிலான பிள்ளைகளைப் பெறுவதிலேயே தற்போதைய பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சனத்தொகை துரிதமாக அதிகரித்துவரும் நாடுகளிலும் கூட இத்தகைய போக்கே உள்ளது.

மறுபுறம், வயோதிபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது. 2050ஆம் ஆண்டில் உலக வயோதிபர்களின் சராசரி வயதெல்லை 77.2 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உலக சனத்தொகையில் 10 வீதமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். 2050இல் இது 16 வீதமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. ஆனால், இதில் கூட உலகளாவிய அடிப்படையில் சமத்துவமின்மையே நிலவுகின்றது. கிழக்கு ஆசியாவையும் மேற்கு ஐரோப்பாவையும் ஒப்பிடும் போது இந்த வேறுபாடு துல்லியமாகத் தெரியும். கிழக்கு ஆசியாவில் சராசரி வயதெல்லை குறைவாகவும் மேற்கு ஐரோப்பாவில் அதிகமாகவும் உள்ள நிலையே காணப்படுகின்றது.

இதேவேளை, வயோதிபர்களில் பெண்களின் எண்ணிக்கையே உலகளாவிய அடிப்படையில் அதிகமாக உள்ளது. இன்றைய தருணத்தில் உலகில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெண்களே 55.7 விழுக்காடு உள்ளனர். எனினும், 2050இல் இந்த விழுக்காட்டில் சிறிதளவு சரிவு ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2050இல் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கை 54.5ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மனித சனத்தொகை அதிகரிப்பு என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமே. ஆனால் மனிதம் அதிகரிக்கின்றதா என்பதே கேள்வி. உலகம் என்ற ஒற்றைச் சொல்லால் அழைக்கப்பட்டாலும் அது அனைத்துப் பிரதேசங்களிலும் ஒன்றுபோல் இல்லை என்பதே கவலைக்குரிய செய்தி. அத்தகைய அவல நிலையில் மாற்றம் ஏற்பட்டு, உலகம் முழுவதிலும் சமமான வளப் பங்கீடும், அனைத்து மக்களுக்குமான வசதி வாய்ப்புகளும் பகிர்ந்தளிக்கப்படும் போக்கும் கிட்டிய எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பில்லை என்பதே தற்போதைய யதார்த்தம். இந்த நிலை மாறுமா? மாற வேண்டும் என்பதே மானுட நேயம் மிக்கோரின் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.