தினேஷ் சந்திமாலின் அரைச்சதத்தோடு வலுப்பெற்றிருக்கும் இலங்கை.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று (17) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் (218) துடுப்பாட்டத்தினை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி 36 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஓசத பெர்னாண்டோ 17 ஓட்டங்களுடனும், கசுன் ராஜித 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தனர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாளில் பாகிஸ்தானை விட 40 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை கிரிக்கெட் அணி, இன்றைய நாளில் முதல் விக்கெட்டாக கசுன் ராஜிதவின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. கசுன் ராஜித மொஹமட் நவாஸின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து 07 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

கசுன் ராஜிதவின் விக்கெட்டின் பின்னர் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஓசத பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் மூன்றாம் நாளின் மதிய போசணத்தினை தாண்டி துடுப்பாடியதோடு 91 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
பின்னர் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டாக யாசிர் சாஹ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஓசத பெர்னாண்டோ தன்னுடைய 6ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஓசத பெர்னாண்டோவின் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் வெறும் 09 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினை மொஹமட் நவாஸிடம் பறிகொடுத்தார்.
அஞ்செலோ மெதிவ்ஸின் பின்னர் குசல் மெண்டிஸின் விக்கெட் பறிபோனது. யாசிர் சாஹ்வின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்ட குசல் மெண்டிஸ் தன்னுடைய 16ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு 9 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

குசல் மெண்டிஸினை அடுத்து எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்டவீரர்களான தனன்ஞய டி சில்வா (20) மற்றும் நிரோஷன் டிக்வெல்ல (12) ஆகியோர் ஏமாற்றமான ஆட்டத்துடன் வெளியேறிய போதும் தினேஷ் சந்திமால் நிதான ஆட்டத்தோடு இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெறுமதி சேர்க்கத் தொடங்கினார்

. இதனையடுத்து சந்திமாலின் நிதான ஆட்டத்தோடு மேலதிக விக்கெட் எதனையும் பறிகொடுக்காமல் மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளையினை இலங்கை அணி அடைந்தது.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் ரமேஸ் மெண்டிஸ் மொஹமட் நவாஸின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனால் இலங்கை கிரிக்கெட் அணி ஒரு கட்டத்தில் 267 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலை ஒன்றுக்கு சென்றது. இந்த நிலையில் புதிய துடுப்பாட்டவீரராக வந்த மகீஷ் தீக்ஷன உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் தன்னுடைய 23ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்தார். அத்துடன் மகீஷ் தீக்ஷனவுடன் இணைந்து 9ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 41 ஓட்டங்களையும்
பகிர்ந்தார். இந்த இணைப்பாட்டத்தோடு இலங்கை அணி பாகிஸ்தானை விட 300 இற்கும் அதிகமான ஓட்டங்களால் முன்னிலை அடைந்தது.

இதனை அடுத்து இலங்கை அணியின் 9ஆம் விக்கெட்டாக ஹஸன் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த மகீஷ் தீக்ஷன 11 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாம் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆட்ட முடிவின் போது பாகிஸ்தானை விட 333 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் தினேஷ் சந்திமால் 86 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 04 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் நவாஸ் 5 விக்கெட்டுக்களையும், யாசிர் சாஹ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.