அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் … 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து

கடன் பிரச்னையில் தன்னை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்து விட்டதாக மாமியார் தெரிவித்ததை ஏற்று, மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017 டிசம்பர் மாதம் 28ம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார்.

மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கடந்த மே 25ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணி சார்பில், மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகி விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரரின் மாமியார், தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். தங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டதால், மருமகனை மன்னித்து விட்டதாக தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதி, தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் குடும்ப பிரச்னையில் உயர் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்பதால், மனுதாரரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.