பீரிஸுக்கு விழுந்தது ‘வெட்டு’.

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவின் பெயரை வழிமொழிந்து – அவருக்கு நேசக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடமிருந்து வெளிவிவகார அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் புதிய வெளிவிவகார அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டாவின் ஆட்சியில் பீரிஸே வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், ஜனாதிபதி தெரிவின்போது பீரிஸ், டலஸ் அழகப்பெருமவுக்குச் சார்பாகச் செயற்பட்டார். இதனால் ‘மொட்டு’க் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசில், பீரிஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. விமான விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை அவர் அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

ஏற்கனவே மேற்படி விடயமானங்களை வகித்தவர்களுக்கு அதே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் எவரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படவில்லை. அடுத்து வரும் நாட்களிலும் அமைச்சர்கள் சிலர் பதவியேற்கவுள்ளனர். இதன்போது பெண் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, அமைச்சரவையில் ஒரு ராஜபக்சகூட இல்லை. மக்கள் எதிர்ப்பால் அவர்களுக்கான கதவடைப்பு தொடர்கின்றது.

பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு ஜனாதிபதி வசம் இருக்கும். அடுத்த அமைச்சரவை நியமனத்தின்போது புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.