ஒருநாள் கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா திரில் வெற்றி.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணியுடன் இந்தியா பங்கேற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ஷுப்மான் கில் ஆகியோர் ஆரம்பம் முதல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த ஷுப்மான் கில் 64 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 54 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர் ஹோப் 7 ரன்னுக்கு வெளியேற, சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும் அடித்தனர். கேப்டன் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.

பாவெல் 6 ரன்னுடன் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த அகேல் ஹோசின், ரொமாரியோ ஷெப்பர்டும் அணியின் வெற்றிக்கு போராடினர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ரன்கள் அடித்தது.

50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹோசின் 32 ரன்னுடனும், ஷெப்பர்ட் 38 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சிராஜ், தாக்கூர், சாகல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

Leave A Reply

Your email address will not be published.