செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை ஒட்டிய பாஜக.. மை பூசி அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் ஒட்டிய நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அதனை மை பூசி அழித்தனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனது. இந்நிலையில், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பாரதப் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர்.இந்திய பிரதமரின் புகைப்படத்தைக் கூட போடாத நிலையை மாற்றிடவும்,மக்கள் விரோத திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாக பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மை பூசி அழித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.