இந்திய விமானப்படை விமானம் வெடித்து சிதறி விபத்து – இரு வீரர்கள் மரணம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இந்திய விமானப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது இரவு 9.10 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக பர்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பந்து கூறுகையில், இந்த விமான விபத்து பர்மர் மாவட்டத்தின் பிம்தா என்ற கிராமத்தின் அருகே ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விமானம் வெடித்து விழுந்த பின்னர், சம்பவ இடத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. ராணுவத்திற்கு உரிய தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய விமானப் படை தலைமை தளபதி விஆர் சவுத்ரியிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். சம்பவத்தில் உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த ராஜ்நாத் சிங். நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய சேவை என்ற மறவாமல் நிலைத்திருக்கும் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் அன்மை காலமாகவே இந்த மிக் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவது அதிகம் காணப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சோவியத் ரஷ்யா காலத்து விமானமான இந்த மிக் ரக விமான பயன்பாட்டை விரைவில் நிறுத்தி நவீன ரக விமான பயன்பாட்டிற்கு மாற இந்திய விமானப் படை தீவிரம் காட்டி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.