பொருளாதாரப் போராட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் ‘கோல்பேஸ்’ ஆர்ப்பாட்டக்காரர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்….

“ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட நான் தயார். நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்குப் போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய நான் எதிர்பார்த்துள்ளேன்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் நான் எதிர்க்கின்றேன். ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பவும் முன்வர வேண்டும்.

இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும்.

வேலைநிறுத்தங்கள் எல்லாக் காலத்திலும் தொடர்ந்தன. வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. பேச்சு மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்க வேண்டும். அக்குழுவில் அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது.

இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்குக் கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய நான் விரும்புகின்றேன். அது தொடர்பில் முறையான ஆலோசனைகளைப் பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்துக் கையளியுங்கள்.

அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டும்.

அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக இருப்பதைப் போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருக்கின்றது.

தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது என எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நீக்குவதற்குத் தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளேன்.

மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளேன்” – என்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“அமைதியான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சட்டவிரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைதுசெய்வதைத் தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

தற்போது எந்தத் தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைதுசெய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்லப் பயப்படுகின்றனர்.

இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும்.

இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டுக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே எமது எதிர்பார்ப்பு.

கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவர விரைவான சீர்திருத்தச் செயல்முறையை நிறுவ வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றோம்.

நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம், கலந்துரையாடல் மற்றும் பேச்சு மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளது. அதற்காக ஜனநாயக நடவடிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புகின்றோம்.

போராட்டத்தின் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது எங்களின் தலைமுறையின் தனிச்சிறப்பு.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுகின்றது. அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றது” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.