இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை வருகின்றது சீனக் கப்பல்? பயணத்தை ஒத்திவைக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இன்னும் பதில் இல்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீனக் கப்பலின் வருகையை உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்குச் சீனத் தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.

பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர்,நேற்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது அறிவித்துள்ளார்.

சீனாவின் இந்த உளவுக் கப்பல் அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபை ஆகியவை கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று வழங்கியுள்ளன.

கப்பல் இப்போது இந்தோனேசியாவுக்கு அருகே நடுக்கடலில் நேரடியாக அம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அதிருப்திக்கு மத்தியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு, சீனத் தூதரகத்துக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

அதில், ‘யுவான் வாங் 5’ கப்பல் அம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று இராஜதந்திர விடயங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூன்றாம் ஆள் குறிப்பு மூலம் இலங்கை கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கை கிடைத்தவுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அவசர சந்திப்பு ஒன்றை சீனாவின் தூதுவர் கேட்டிருந்தார். இந்தச் சந்திப்பே நேற்று இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.