மகளிர் இலவச பேருந்து முழுவதும் பிங்க் நிறம் – போக்குவரத்து கழகம் முடிவு

பெண்களுக்கான இலவச பேருந்துகள் முழுமையாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்றவும் பேருந்துகளின் பக்கங்களை விளம்பரத்திற்காக விட அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது.

ஆனால் ஒரு சில நேரங்களில் பெண்கள் சாதாரணப் பேருந்துகளுக்கு பதிலாக சொகுசு பேருந்துகளில் ஏறிவிடுகின்றனர். எனவே பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்களை அடையாளம் காட்டும் வகையில் ‘பிங்க்’ நிறத்தில் மாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் 6 அறிவிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக பேருந்துகளின் முகப்பு மட்டும் பிங்க் நிறமாக மாற்றப்பட்டது. இதனால் முன்னாடி இருந்து பார்க்கும் பொது மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது. திட்டம் தொடங்கப்பட்ட குறிக்கோளுக்கு பலனில்லாமல் இருந்தது. இதனால் சென்னை மாநகர சார்பில் புதிய ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பேருந்து முழுவதும் பிங்க் நிறமாக மாற்ற போதிய நிதியை திரட்ட பேருந்துகளின் பக்கங்களை விளம்பரங்களுக்கு வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது.

மாதத்திற்கு 10,000 ரூபாய் செலுத்தி பேருந்தின் பக்கங்களில் விளம்பரங்களை செய்து கொள்ள சென்னை போக்குவரத்துக் கழகம் அனுமதி அளிக்கிறது. இதன் முதற்கட்டமாக சென்னையின் ஒரு சில சாதாரண பேருந்துகளில் தமிழ்நாடு போக்குவரத்து துறை நிதி கழகம் சார்பில் பிங்க் நிற பின்னணியில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.