பிரதமர் பதவிக்கு தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட வேண்டும்! – அமைச்சர் பத்திரண வலியுறுத்து.

“இனவாதமற்ற சமூகத்தைத் தோற்றுவிக்க வேண்டுமாயின் குறைந்தபட்சம் பிரதமர் பதவிக்கு தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் தெரிவு செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான மனநிலை காணப்பட வேண்டும். இருப்பினும் அந்த மனநிலை இதுவரை தோற்றம் பெறவில்லை.”

– இவ்வாறு பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அமைச்சர், மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார். கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அவர் நாட்டுக்காகச் சிறந்த விடயங்களைச் செயற்படுத்தியிருந்தாலும், கொரோனாத் தொற்று மற்றும் தூரநோக்கற்ற பொருளாதாரக் கொள்கை ஆகிய காரணிகளால் பதவி விலக நேரிட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசால் செயற்படுத்த முடியாத விடயங்களை மக்களின் எதிர்பார்ப்புக்கமைய செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தினதும், மக்களினதும் நம்பிக்கையை வென்று அவர் முன்னோக்கிச் செல்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அரசமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளது. பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் கொள்கை தொடர்பான தீர்மானங்கள் பிரபல்யமடையும் வகையில் அமையாவிடினும், அதனைச் செயற்படுத்தி சவால்களை வெற்றிகொள்ள வேண்டும்.

1948ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல், சமூகக் கட்டமைப்பு காலத்துக்குக் காலம் மாற்றமடைந்துள்ளது. ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டுக்கு ஏதேனும் சிறந்த திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளார்கள். அனைத்து தலைவர்களும் ஊழல், மோசடியாளர்கள் எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்லின சமூகம் வாழும் நாடு என்ற ரீதியில் இனவாத முரண்பாடுகளுக்கு மத்தியில் பல சிறந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு முன்னெடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளன. பொருளாதார மீட்சிக்காக அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் பிரபல்யமற்றதாக அமைந்தாலும், பொருளாதார மீட்சிக்கு ஏற்புடையதாக அமையும். நாட்டு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்.

இனவாதமற்ற சமூகத்தைத் தோற்றுவிக்க வேண்டுமாயின் குறைந்தபட்சம் பிரதமர் பதவிக்குத் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் தெரிவு செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான மனநிலை காணப்பட வேண்டும். இருப்பினும் அந்த மனநிலை இதுவரை தோற்றம் பெறவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.