சீன கப்பல் இலங்கைக்கு வருகிறது : அமெரிக்காவும் – இந்தியாவும் அதிருப்தி.

‘யுவான் வான் 5’ என்ற சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது, இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன என்பதை எழுத்து மூலம் தெரிவிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அந்த கோரிக்கைக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை என்று உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதிப்பதற்கு அண்மையில் கூட்டப்பட்ட தேசிய பாதுகாப்புச் சபையிலும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்தக் கப்பல் ஆகஸ்ட் 16ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்து அங்கு நங்கூரமிட உள்ளது.

இது ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி குறைந்த வேகத்தில் பயணித்து வருகிறது.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் , இலங்கை வரவுள்ள கப்பலை உள்ளே அனுமதிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் தனது கவலையை தெரிவித்திருந்த போதிலும், சீனக் கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கு உறுதியான காரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இதே செய்தியை இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

இவ்விரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களைச் சமர்ப்பிக்காததால், சீனக் கப்பலை இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இதனிடையே இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படுவதால், சீனக் கப்பலின் வருகைக்கு எதிராக தனது சேவைகளை வழங்குவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.