தமிழகத்தில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டியது அம்பலம்

கடந்த அதிமுக ஆட்சியில் 2017ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டுவரை சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டியது தற்போது தெரியவந்துள்ளது.

சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக அதிமுக ஆட்சிகாலத்தில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தமிழக அரசுக்கு சிறப்பு விருது கிடைத்தது. இந்நிலையில், 2017 முதல் 2020ம் ஆண்டு வரையிலான தரவுகளை மறு ஆய்வு செய்தபோது, இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, ” 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான தரவுகளில் சில தரவு பிழைகள் இருந்தன. அதை நாங்கள் சரிசெய்துள்ளோம். மேலும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

2017-2020 காலகட்டத்தில் சாலை விபத்துகள் குறித்த தரவுகளின்படி, நான்கு ஆண்டுகளில் 22,018 கூடுதல் இறப்புகளைக் கண்டறியப்பட்டுள்ளது. திருத்திய தரவுப்படி, 2020 ஆம் ஆண்டில் மட்டும், முன்னர் இருந்த இறப்புகள் எண்ணிக்கையை விட 80 சதவீதம் அதிகரித்துள்ளன.

சரி செய்யப்பட்ட தரவுகளின்படி, பழைய எண்ணிக்கையில் இருந்து புதிய எண்ணிக்கை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. 2017 இன் இறப்பு எண்ணிக்கை 16,157 இல் இருந்து 17,926 ஆக அதிகரித்துள்ளது. 2018 இன், இறப்புகள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து 12,216 இலிருந்து 18,394 ஆகவும், 2019 இன் எண்ணிக்கை 10,525 இல் இருந்து 72 சதவீதம் அதிகரித்து 18,129 ஆகவும் உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது, ​​​​ஆரம்பத்தில் 8,060 சாலை விபத்து இறப்புகளாக பதிவிடப்பட்டிருந்தது. இப்போது 14,527 ஆக உள்ளது, இது 80 சதவீதம் அதிகரித்துள்ளது. தரவு திருத்திற்குப் பிறகு நான்கு ஆண்டுகளில் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 12 முதல் 83 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தரவுகளின் சரிபார்ப்பு ஏன் எடுக்கப்பட்டது என்று கேட்டபோது, ​​​​இது வழக்கமான நடவடிக்கை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. “வேறுபாடுகளுக்கான தரவை நாங்கள் எப்போதும் சரிபார்ப்போம். இது நான்கு வருட தரவு என்பதால் நீண்ட நேரம் எடுத்தது.” என்று காவல் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் திருத்தப்பட்ட தரவுகளை மாநில அரசு மற்றும் தேசிய குற்றப் பதிவுப் பணியகத்திற்கும் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை கூறியது.

நாட்டிலேயே அதிக சாலை விபத்துகளைப் பதிவு செய்த தமிழ்நாடு, 2018 இல் 24 சதவீதமும், 2019 இல் 13 சதவீதமும் இறப்புகளைக் குறைத்துள்ளது. 2019, தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்படும் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், சாலை விபத்து இறப்புகள் 8,060 ஆகக் குறைந்தபோது, 2025 ஆம் ஆண்டளவில் விபத்துக்களை 50 சதவிகிதம் குறைக்கும் மில்லினியம் இலக்கை அடைந்துள்ளதாக அரசு கூறியது.

விபத்து இறப்புகளைக் குறைக்க சாலைப் பொறியியல் மற்றும் அமலாக்கத் தீர்வுகளை வழங்குவதற்கான முதல் படியாக, சாலைப் பாதுகாப்புக்கான சிறப்புப் பணிப் படை (STF-RS) ஐந்து பேர் கொண்ட குழுக்கள் மூலம், தமிழ்நாட்டில் சுமார் 3,500 விபத்து நேரும் இடங்களைக் கண்டறிந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததற்காக , கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட விருதுகள் திரும்ப பெறப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.