அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து கர்ப்பம் காரணமாக கெர்பர் விலகல்.

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனியை சேர்ந்த 34 வயது ஏஞ்சலிக் கெர்பர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அத்துடன் அவர் கர்ப்பம் காரணமாக வருகிற 29-ந் தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

இது குறித்து ஏஞ்சலிக் கெர்பர் தனது டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். ஆனால் இறுதியாக இருவருக்கு (கர்ப்பமாக இருப்பதை சுட்டிக்காட்டி) எதிராக ஒருவர் ஆடுவது நியாயமான போட்டியாக இருக்காது என்பதால் விலக முடிவு எடுத்தேன். அடுத்த மாதத்தில் இருந்து ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதில் இருந்து ஓய்வு எடுக்க இருக்கிறேன். ஆனால் இது மிகச்சிறந்த காரணத்துக்காக என்று நம்புகிறேன்.

நான் உங்கள் எல்லோரையும் தவற விடுகிறேன். நியூயார்க், எனது டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி திருப்பு முனையாக இருந்து இருக்கிறது. இதனால் இந்த வருடமும் வித்தியாசமாக இருக்காது என்று உணர்கிறேன். இங்கு 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன். இதனால் நியூயார்க்குக்கு எனது மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறேன். அதே நேரத்தில் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.