5 செல்போன்களில் உளவு பொருள் இருந்தது, ஆனால்.. பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தொழில்நுட்ப குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 5 செல்போன்களில் உளவு பொருள் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அது பெகாசஸ் உளவு பொருளா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ (NSO) நிறுவனம் தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கிய பிரபலங்கள் உளவு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்கள், பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், 29 செல்போன்களை ஆய்வு செய்ததில், 5 போன்களில் உளவு மென்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த மென்பொருள் பெகாசஸ் தான் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக உளவு பார்க்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சைபர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க இணைய பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அவசியம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பாக புகார் அளிக்க அரசு உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெகாசஸ் உளவுப்பொருள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.