தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து 415 ரன் குவித்து ‘டிக்ளேர்’.

இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 151 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது.

பேர்ஸ்டோ (49 ரன்), ஜாக் கிராவ்லி (38 ரன்) ஆகியோர் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் பென் போக்சும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு உயர்த்தினர். தனது 12-வது சதத்தை எட்டிய பென் ஸ்டோக்ஸ் 103 ரன்களில் (163 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். பென் போக்ஸ் தனது 2-வது சதத்தை அடித்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 106.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. போக்ஸ் 113 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்து 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்துள்ளது. இன்று, 3-வது நாள்ஆட்டம் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.