4 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அமெரிக்கா அதிர்ந்தது: 12 பேர் பலி.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே துப்பாக்கி வன்முறை சம்பங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. அங்கு துப்பாக்கி கலாசாரம் ஒரு தொற்றுநோய் போல பரவி வருகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என சூளுரைத்து வந்தாலும், துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இதனால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 350-க்கும் அதிகமான மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்காவின் வெவ்வேறு இடங்களில் நடந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது. முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நடந்தது. அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் முதலில் அங்கிருந்த ஒரு வீட்டுக்கு தீ வைத்தார். பின்னர் அவர் மறைவான இடத்துக்கு சென்று பதுங்கினார்.

இதற்கிடையில் வீட்டினுள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் தீப்பிடித்து எரிவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அப்போது மறைவான இடத்தில் பதுங்கி இருந்த அந்த மர்ம நபர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடி இறந்தனர்.

இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய அந்த நபர் 40 வயதான ஆப்பிரிக்க வம்சாவளி என்பது தெரியவந்துள்ளதாக கூறிய போலீசார் துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர். பச்சிளம் குழந்தை சாவு இந்த கோர சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த் நகரில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.

இதில் 17 வயது சிறுவனும், 5 வயது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் ஒரே நபர் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார்.

இதில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடிவந்த போலீசார் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் அவரை கைது செய்தனர். இதைதொடர்ந்து 4-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரேகான் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்தது. பென்ட் நகரில் உள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

அவர் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 2 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரே நாளில் 4 இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.