கோட்டயத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவிகள்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பும் திகில் காட்சிகள்…

கேரளாவில் தற்போது கோட்டயம் உட்பட மலப்புறம் பகுதிகளில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கோட்டயத்தில் பெய்து வரும் தொடர்மழையால் மீனச்சல் ஆற்றிலும் காட்டுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில் கோட்டயம், தீக்கோரி பகுதியில் உள்ள சென்மேரிஸ் பள்ளியில் படிக்கும் இரு மாணவிகள் பள்ளி முடிந்து ஐய்யன்பாறை சாலை வழியாக நடந்து வந்தனர்.

அப்போது எதிரே வாகனம் ஒன்று வந்ததால் சாலையின் ஒரு பகுதியில் மாணவிகள் ஒதுங்கியுள்ளனர். இதில் மீனச்சல் ஆற்றில் கலக்கும் கால்வாய் ஒன்றில் சக்தி வாய்ந்த மழை வெள்ள நீரோட்டத்தின் போது இரு மாணவிகளும் கால் தவறி விழுந்துள்ளனர். ஆனால் அதிக ஆழமில்லாததால் மாணவிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டனர்.

இவர்கள் மாட்டிக் கொண்ட பகுதியில் இருந்து சுமார் 25 மீட்டர் அருகில் தான் மீனச்சல் காட்டாறும் கரைபுரண்டு ஓடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு மாணவிகளும் தண்ணீரில் சிக்கிக்கொண்ட திகில் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.