அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடந்தன. இதில் ஆண்கள் பிரிவில் ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-2, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவை துவம்சம் செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்சிஸ்கோ செருன்டோலோவை (அர்ஜென்டினா) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் டாங்கா கோவினிச்சை (மான்டினெக்ரோ) வெளியேற்றி 2-வது சுற்றை எட்டினார்.

40 வயதான செரீனா இந்த போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்து இருப்பதால் அவரது ஆட்டத்தை காண 29,000-க்கும் அதிகமான ரசிகர்கள் ஸ்டேடியத்தில் திரண்டு உற்சாகப்படுத்தினர். அடுத்த சுற்றில் செரீனா, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்டை சந்திக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.