கனல் கண்ணனுக்கு ஜாமீன்! அவதூறாக பேசமாட்டேன் என உறுதி அளிக்க உத்தரவு

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி அமைப்பின் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென மூன்று முறை பேசியிருந்தார்.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணன் ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கனல் கண்ணன் கோரிய ஜாமீன் மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோயிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துர்திஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வெறுப்பை பரப்பும் வகையில் கனல் கண்ணன் பேசியுள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறைதரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்று கொள்கை உடையவர் குறித்து ஏன் பேச வேண்டும் என கனல் கண்ணன் தரப்பினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், இது போன்ற தேவையற்ற கருத்துகளை யூ.டியூப்-ல் பேசுவது பேஷனாகி விட்டதாகவும் தெரிவித்த நீதிபதி, கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட என்றும் இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.